ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் 343 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்படும்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு 343 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்படும். மேலும் சென்னையில் உள்ள பயணிகள் முன்பதிவு மையங்கள் நாளை செயல்படாது என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்கள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பொது போக்குவரத்து மற்றும் மெட்ேரா ரயில்கள் இயக்கப்படாது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய பணிகள் மட்டும் நடைபெற அரசு அனுமதி அளித்துள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் செல்வதற்கு ஏதுவாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் குறைந்த அளவு மின்சார ரயில் சேவைகள்  இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

இதையடுத்து சென்னையில் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே 113 ரயில்கள், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே 60 ரயில்கள், சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 36 ரயில்கள், கடற்கரை - செங்கல்பட்டு இடையே 120 ரயில்கள், ஆவடி - பட்டாபிராம் ராணுவ சைடிங் இடையே 4 ரயில்கள், பட்டாபிராம் - பட்டாபிராம் ராணுவ சைடிங் இடையே 10 ரயில்கள் என மொத்தம் 343 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும். மேலும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து முன்பதிவு மையங்களும் நாளை செயல்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: