திருமயம் வட்டாரத்தில் மழையால் சேதமான நெற்பயிர்களை வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு

திருமயம், ஜன.8: திருமயம் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் பயிர் சேதங்களை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரத்தில் தற்போது பெய்து முடிந்த வட கிழக்கு பருவ மழையினால் அறுவடைக்கு தயாரான சம்பா நெல் பாதிக்கப்பட்ட பயிர் சேத விவரங்களை புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் விராச்சிலை, லெட்சுமிபுரம் மற்றும் ஊனையூர் ஆகிய கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமா உடன் இருந்தார். மேற்படி ஆய்வின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளை வேளாண்மை இணை இயக்குநர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, பயிர் அறுவடைக்கு பின்செய் நேர்த்தி தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துக்கூறினார்.

மழைக்கு பின் தூர்கட்டும் நிலையில் உள்ள பயிர்களுக்கு மழைநீரை வடிகட்டி பூஞ்சாணம் மற்றும் பாக்டீரிய மூலம் தாக்கும் நோய்கள் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏக்கருக்கு சூடோமோனாஸ் 400 கிராம் உடன், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கை தெளிப்பான் மூலம் தெளிக்க ஆலோசனை கூறினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் கணேசன், மீனாள் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் முருகன் ஆகியோர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அடையாளம் கண்டு ஒருங்கிணைப்பு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மேலும் இப்பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் அருண்மொழி, பத்மபிரியா மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் அருளரசு மற்றும் பிரபுராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: