×

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நாடக நடிகர் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டம்

புதுக்கோட்டை, ஜன.8: புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தை சேர்ந்த 70 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா‌ வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை ஆரம்பித்து பொதுமக்களுக்கு அதி தீவிரமாக கொரோனா பரவி வருவதால் தமிழக அரசு இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடக நடிக கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் தற்பொழுது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு இரவு நேர முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் நாடக நடிகர் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்று கூறி புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தில் உள்ள கலைஞர்கள் அனைவரும் பல்வேறு வேடமணிந்து நாடக நடிகர் சங்கத்தில் இருந்து ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையம் அருகே பழைய அரசு தலைமை மருத்துவமனை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழக அரசு நாடக நடிகர் கலைஞர்களுக்கும் 50 சதவீதம் தளர்வுகளுடன் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாடக நடிகர் கலைஞர்களிடம் நகர காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது காவல்துறைக்கும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாடக நடிகர் கலைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்தனர்.

Tags : Drama Actors' Association ,
× RELATED நாடக நடிகர் சங்கத்தினர் கலெக்டரிடம்...