கொரோனா தொற்று பரவல் காரணமாக பெரம்பலூரில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன

பெரம்பலூர்,ஜன.8: கொரோனா தொற்று பரவல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. கொரோனா தொற்று பரவலின் 3வது அலை மற்றும் புதிய வைரஸ் தொற்றான ஒமிக்கிரான் பரவலை கட்டுப்படுத்தவும் ஏதுவாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலாத்தலமான, பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வழக்கம் போல் நடை திறக்கப்படும் வெள்ளிக்கிழமையான நேற்று மூடப்பட்டிருந்தது. இருந்தும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரண்டு சென்றதால் வாசலின் முன்பு நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

இதேபோல் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோயில் பல்வேறு கோயில்கள், பெரம்பலூர் புனித பனிமய மாதா தேவாலயம், பாளையம் புனித சூசையப்பர் தேவாலயம், அன்னமங்கலம் தொண்டமாந்துறை, வடக்கலூர், திருமாந்துறை, பெருமத்தூர், திருவாலந்துறை பாடாலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களும், மாவட்டத்தின் மிகப்பெரிய பள்ளிவாசலான வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசல், லெப்பைக் குடிகாடு மேற்கு மஹல்லம், கிழக்கு மஹல்லம், அரும்பாவூர் ஜாமியா பள்ளி வாசல், வாலிகண்டபுரம் ஆஸார் மக்பூரா பள்ளிவாசல், விசுவக்குடி ஜாமியா பள்ளிவாசல் உள்ளிட்ட இந்து கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் அனைத்தும் நேற்று முதல் மூடப்பட்டு இருந்தன.

Related Stories: