ஆண்டிமடம் அருகே அரசு பேருந்து-சரக்கு லாரி மோதல்

ஆண்டிமடம், ஜன.8: ஆண்டிமடம் அருகே அரசு பஸ்சும், சரக்கு லாரியும் மோதி கொண்ட விபத்தில் அரசு பஸ் டிரைவர், பயணிகள் உட்பட 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பஸ் ஸ்டாண்டில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று விருத்தாச்சலம் சென்றது. பேருந்து ஆண்டிமடம்-விருத்தாச்சலம் மெயின் ரோட்டில் கருக்கை கிராமம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அதே ரோட்டில் எதிரே வந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதுவது போல் வந்தது. லாரியை கண்ட அரசு பஸ் டிரைவர் விபத்தை தவிர்க்க ரோட்டின் இடது பக்கம் பஸ்சை இயக்கி உள்ளார். அப்போது லாரியின் முன் பக்கம் பஸ்ஸின் பின்பகுதியில் உரசிக்கொண்டு நின்றது.

விபத்தை தவிர்ப்பதற்காக அரசு பஸ் ரோட்டின் அருகே பள்ளத்தில் இறங்கி நின்றது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பஸ்சில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர். இதில் சரக்கு லாரி பஸ் மீது உரசியதில் அரசு பஸ் டிரைவர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (37) என்பவரும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் ராங்கியம் காலனி தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் தேவன்(18), பூமிகா (கல்லூரி மாணவி) (19), ராங்கியம் மேற்கு தெருவைச் சார்ந்த ராஜேந்திரன் (60), தில்லை கோவிந்தன் (62) ஆகியோர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: