×

தட்டுபாடை தவிர்க்க குமரியில் தேவைக்கு ஏற்ப உரங்கள் இருப்பு உள்ளது; வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

நாகர்கோவில், ஜன.8: குமரி வேளாண்மை இணைஇயக்குநர் சத்திய ஜோஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரியில் தற்போது கும்பப்பூ சாகுபடி 5689 எக்டேரில்  செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கு தேவையான  உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. யூரியா 809 மெட்ரிக் டன், டிஏபி 192 மெ. டன், சூப்பர்பாஸ்பேட் 112 மெ.டன், என்.பி.கே கலப்புரங்கள்1478 மெ.டன் வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நெல், வாழை,  தென்னை பயிர்களுக்கு தேவையான அத்தியவாசிய உரமான யூரியா, என.பி.கே தட்டுபாடின்றி விவசாயிகளுக்கு கிடைக்க வேளாண்மைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக  வரும் வாரத்தில், 300 மெ.டன் யூரியா குமரிக்கு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரங்களை கூட்டுறவு சங்கங்கள், தனியார்கள், சில்லறை விற்பனையாளர்கள், அதிக பட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யாமல் இருக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

உர விற்பனையாளர்கள், எவ்வித தடங்கலும் இன்றி, உரங்களை விற்பனை செய்வதுடன், உர விற்பனை குறித்து எவ்வித புகார்களும் வராத வகையில், பதுக்கல்  போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இதுகுறித்து புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது  கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  உர விற்பனையாளர்கள், உரங்களை  உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் இருப்பு வைப்பதும், அனுமதி பெறாத  நிறுவனங்களில் கொள்முதல்  செய்வதும் கூடாது. விவசாயம் செய்யாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திடீர் ஆய்வின் போது மேற்கண்ட குறைபாடுகள்  கண்டறிப்பட்டால், உர விற்பனை உரிமம் உரக்கட்டுபாடு ஆணை 1985ன்படி  ரத்து செய்யப்படும். விவசாயிகள் உரம் வாங்க செல்லும் போது ஆதார் அட்டையுடன் சென்று வாங்க வேண்டும். உரம் வாங்கும் போது உரிய பட்டியல் கேட்டுப் பெற வேண்டும். இதுகுறித்து புகார்கள் இருப்பின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது வேளாண்மை  இணைஇயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கலப்பு உரங்களையும் பயன்படுத்தலாம்

வேளாண் இணையக்குநர் சத்தியஜோஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது: டிஏபி உர மூலப்பொருட்கள் தட்டுபாடு காரணமாக, மாற்றாக கலப்பு உரங்களையும் பயன்படுத்தலாம். 20: 20: 0: 13 கூட்டு உரங்களில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான மணிச்சத்து 20 சதம்உள்ளது. 17: 17: 17 காம்பளக்ஸ் உரங்களில் மணி சத்து 17 சதம் உள்ளது. மணிசத்து பயிர்கள் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. கலப்பு உரங்களிலும் மணிசத்து உள்ளது. இந்த உரங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால், எளிதில் கிடைக்கிறது. விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப கலப்பு உரங்களை  விநியோகித்திட தமிழக வேளாண்மைத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kumari ,Associate Director ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...