×

கொரோனா தொற்று அதிகரிப்பால் நெல்லை உழவர் சந்தைகள் இன்று முதல் இடமாற்றம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுகோள்

நெல்லை, ஜன. 7: நெல்லையில் மகாராஜநகர், மேலப்பாளையம் ஆகிய உழவர் சந்தைகள் உள்ளன. இந்த உழவர் சந்தைகளில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் உழவர் சந்தைகளில் தினமும் கூட்டம் அலைமோதும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் உழவர் சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்கு தினமும் ரூ.10 லட்சம் அளவிற்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.13 லட்சம் அளவிற்கும் காய்கறிகள், பழங்கள் விற்பனை நடந்து வருகிறது. கொரோனா தொற்று வேகம் எடுத்த போது நெல்லை மகாராஜநகர் உழவர் சந்தை மூன்றாக பிரிக்கப்பட்டு அருகில் உள்ள பூங்கா, ரயில்வே கேட் அடுத்துள்ள பூங்கா, பள்ளி எதிரில் உள்ள பூங்கா ஆகிய மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்டது. இதே போல மேலப்பாளையம் உழவர் சந்தை அருகில் உள்ள பள்ளியின் மைதானத்திற்கு மாற்றப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று வேகம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து உழவர் சந்தைகளை பிரித்து மாற்று இடங்களுக்கு மாற்ற கலெக்டர் விஷ்ணு நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து மகாராஜநகர் உழவர் சந்தை இன்று முதல் அருகில் உள்ள சாலை போக்குவரத்து பூங்கா மற்றும் ரயில்வே கேட் அருகில் உள்ள அன்புநகர் சிறுவர் பூங்கா ஆகிய இரண்டு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இதே போல மேலப்பாளையம் உழவர் சந்தையில் ஒரு கடை விட்டு ஒரு கடை இயங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 1, 3, 5, 7, 9 என்ற வரிசையிலான கடைகள் ஒரு நாள் இயங்கினால், மறு நாள் 2, 4, 6, 8 ஆகிய வரிசையிலான கடைகள் இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என வேளாண்மை விற்பனைத் துறை துணை இயக்குநர் முருகானந்தம் தெரிவித்தார். 

Tags :
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...