குமாரபாளையம் நகராட்சி பகுதியில் சாயப்பட்டறை கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம்

குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி பகுதியில் சாயப்பட்டறை கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். குமாரபாளையம் நகராட்சி 12, 20 மற்றும் 25வது வார்டு பெரியார் நகர், அப்பன்காடு, தெலுங்கு மாரியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக பொதுமக்களுக்கு வினியோகித்த குடிநீர், சாக்கடை கழிவுநீர் கலந்தது போல் துர்நாற்றம் வீசியது. இந்நிலையில் நேற்று காலை, வினியோகித்த குடிநீர் லேசான பச்சை நிறத்தில் வந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் இரவு நேரத்தில் சாக்கடையில் வெளியேற்றப்படும் சாயக்கழிவுநீர், குடிநீர் குழாயில் கலந்ததால் தான், தண்ணீர் பச்சை நிறமாக மாறியுள்ளது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள், சாயக்கழிவுநீர் கலந்த தண்ணீரை பாத்திரங்களில் பிடித்து வைத்துக்கொண்டு, நகராட்சி அலுவலகம் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள், தண்ணீரை ஆய்வு செய்தனர். அப்போது, சாக்கடை கால்வாய் வழியாக வெளியேறிய சாயப்பட்டறை கழிவுநீர், குடிநீர் குழாயில் கலந்திருப்பதை உறுதிசெய்தனர். இதையடுத்து நகராட்சி பொறியாளர் தலைமையிலான ஊழியர்கள், குடிநீர் குழாய் செல்லும் பகுதிகளை சோதனையிட்டனர். இதில் திருவள்ளுவர் நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் அருகே 2 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருந்ததையும், அதன் மூலம் சாயப்பட்டறை கழிவுநீர் குடிநீரில் கலந்திருப்பதையும் உறுதி செய்தனர். இதையடுத்துஉடைந்த குடிநீர் குழாயை துண்டித்து விட்டு, புதிய குழாய்களை பொருத்தி சரிசெய்தனர்.

பின்னர், குழாயில் இருந்த கழிவுநீரை வெளியேற்றினர். இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சசிகலா கூறுகையில், ‘இரண்டு இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இன்று முதல் மீண்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்,’ என்றார். 5 சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை மாசுகட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகுமார் கூறுகையில், ‘அம்மன் நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், நடராஜா நகர் பகுதியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ததில், ஏற்கனவே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட சாயப்பட்டறைகளை, அதன் உரிமையாளர்கள் இரவு நேரத்தில் இயக்கி, சாயக்கழிவுநீரை சாக்கடை கால்வாய் வழியாக வெளியேற்றியுள்ளனர். மறைமுகமாக இயங்கிய இந்த 5 சாயப்பட்டறைகள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க ஆர்டிஓவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,’ என்றார்.

Related Stories: