கிழக்கு கால்வாய் பாசன பகுதியில் இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை துவங்கியது

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் கிழக்குகரை கால்வாய் பாசன பகுதியில், விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை துவக்கி உள்ளனர். எலந்தகுட்டையில் இன்று நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் திறந்து வைக்கிறார். மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் பாசன பகுதியான பள்ளிபாளையத்தில், இந்தாண்டு சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப தண்ணீர் கிடைத்ததால் நெற்பயிர் செழித்து வளர்ந்தது. கால்வாய் கரையோர பகுதிகளில், தற்போது நெல் அறுவடை பணிகளை துவக்கி உள்ளனர். களியனூர், எலந்தகுட்டை, ஆலாம்பாளையம், மோளகவுண்டம்பாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த ஒருவாரமாக நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. விவசாய கூலி ஆட்கள் கிடைக்காததால், 50க்கும் மேற்பட்ட நெல் அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடை நடந்து வருகிறது.

அறுவடை செலவும், நேரமும் குறைவாக இருப்பதால், விவசாயிகள் இயந்திரங்களை பயன்படுத்தி அறுவடை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அறுவடை செய்த நெல்லுக்கு அரசு அறிவித்துள்ள ஆதாரவிலையை விட, குறைவாக விலை போவதை தடுக்கவும், தரகர்களின் நெருக்கடியை குறைக்கவும், இந்தாண்டு அறுவடை துவக்கத்திலேயே நெல் கொள்முதல் நிலையம் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி இன்று (7ம்தேதி) மதியம் 12 மணியளவில், எலந்தகுட்டை பொன்காளியம்மன் கோயில் வளாகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங் திறந்து வைக்கிறார். வியாபாரிகளிடம் உரிய விலை கிடைக்காவிட்டாலும், அரசு அறிவித்த அடிப்படை ஆதார விலைக்கு, கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துகொள்ள வாய்ப்பு இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: