×

சூலூரில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி முன் அமர்ந்து தகராறு செய்த ஊழியர்கள்

சூலூர்: சூலூர் பகுதியில் ஆக்கிரமிப்பு டீ கடையை  அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தின் முன் அமர்ந்து தகராறு செய்த ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சூலூர் திருச்சி சாலை,கலங்கல் சாலை மற்றும் கலங்கல் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் சுப்புலட்சுமி மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இருந்த டீ கடையை நேற்று மாலை அப்புறப்படுத்த ஜேசிபி உடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்தனர்.

ஆவின்  டீ கடை என்ற பேரில் இயங்கி வந்த இந்த கடைக்கு உரிய அனுமதி இல்லை என தெரிகிறது. அந்த கடையை அகற்றும் போது கடையில் இருந்த ஊழியர் ராஜபாண்டி மற்றும் இரண்டு பேர் கடையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். அதையும் மீறி உடனடியாக இடித்து அப்புறப்படுத்த பொறியாளர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். ஜேசிபியால் கடையை இடித்த போது ராஜபாண்டி மற்றும் கடை ஊழியர்கள் ஜேசிபி இயந்திரத்தின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த நெடுஞ்சாலை பொறியாளர் சுப்புலட்சுமி அளித்த தகவலின் பேரில் சூலூர் எஸ்ஐ நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டீகடை ஊழியர்களை  அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் டீ கடை மற்றும்அந்த பகுதியில் இடையூறாக இருந்த பூ கடை, பெட்டிக்கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். கடை ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : JCP ,Sulur ,
× RELATED சூலூரில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து