உத்திரமேரூர் அருகே அதிகாலையில் பயங்கர விபத்து; வேன் மீது கார் மோதி 3 பேர் பலி: 16 பேர் உயிர் தப்பினர்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே எதிரே வந்த வேன்மீது கார் மோதியதில், 3 பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். 16 பேர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரக்கோணம் தாலுகா, குருவராஜப்பேட்டையில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு வேனில் மேல்மருவத்தூர் கோயிலுக்கு 13 பெண்கள், 3 ஆண்கள் புறப்பட்டனர். காஞ்சிபுரம் -  வந்தவாசி சாலையில், அதிகாலை 3 மணியளவில் உத்திரமேரூர் அருகே பெருநகர் பகுதியில்  வேன் சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து எதிரே காஞ்சிபுரம் நோக்கி வந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  வேன் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

பின்னர் அதே வேகத்தில், சாலையோர மரத்தில் மோதி காரின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது.  காரின் இடிபாடுகளில் சிக்கி, அதில் பயணம் செய்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம், சுந்தரமூர்த்தி, சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவலறிந்து பெருநகர் போலீசார் சம்பவ  இடத்துக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், வேனில் இருந்த 16 பேர், லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories: