அரியலூர் மாவட்டத்தில் ஊரடங்கு புதிய கட்டுப்பாடு விதிகள்

அரியலூர், ஜன.7: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரியலூர் மாவட்டத்தில் தமிழகஅரசின் உத்தரவின்படி பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை, அரசு ஆணையின்படி வரும் ஜனவரி 10ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவிவரும் உருமாறிய கொரோனா ஒமிக்ராகன் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் பின்வரும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் 6.1.2022 (நேற்று) முதல் வார நாட்களில் இரவு 10 மணிமுதல் காலை 5 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிகவளாகங்கள், வணிகநிறுவனங்கள், கடைகள் உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.

அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவதுறை சார்ந்த பணிகள் மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும் மேற்குறிப்பிட்ட அத்தியாவசிய பணிகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படும். 9ம் தேதி அன்று முழு ஊரடங்கின் போது உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணிவரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. 9ம் தேதி மற்றும் வாரநாட்களில் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக, ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது பயணச்சீட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுபள்ளிகள் நர்சரிப் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. அனைத்து பள்ளிகளிலும், 1ம் வகுப்புமுதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. பொதுதேர்வுக்குச் செல்லும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும். அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணைமருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது. பயிற்சி நிலையங்கள் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவதுதற்போது ஒத்திவைக்கப்படுகிறது. பொது பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில, 50 சதவீத பேர் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலைவிழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது. அனைத்துபொழுதுபோக்கு கேளிக்கைபூங்காக்கள் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் வணிகநிறுவனங்கள், கடைகளை மூட மவாட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்ககொள்ளப்படும். பொதுமக்கள் அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறும், கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், ெபாது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும், பொதுமக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Related Stories: