×

கொரோனா தொற்று அதிகரிப்பு குமரி மாவட்டத்தில் பூங்காக்கள் மூடல் நாகர்கோவிலில் ஒரே தெருவில் 7 பேர் பாதிப்பு

நாகர்கோவில், ஜன. 7: குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாகர்கோவிலில் ஒரே தெருவில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து சளி பரிசோதனையை அதிகரித்துள்ளனர். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் தவிர மற்ற பகுதிகளிலும் சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் மட்டும் 3,934 பேருக்கு சளி பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 74 பேருக்கு தொற்று பரவல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் நெல்லை மாவட்டத்தையும் மற்றொருவர் விருதுநகர் மாவட்டத்தையும் சேர்ந்தவர் ஆவர். மீதியுள்ள 72 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 60,780 ஆக உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதியில் நேற்று முன்தினம் 29 பேருக்கு தொற்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது.

 இதில் 7 பேர் கோணம் பகுதியில் உள்ள ஒரு தெருவை சேர்ந்தவர்கள் ஆவர். அதில் ஒரு வீட்டிலே 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியை சுற்றியுள்ளவர்களிடம் இருந்து சளிமாதிரிகள் சேரிக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்து இருந்தது. ஆனால் நாகர்கோவில் மாநகர பகுதியில் பலர் முககவசம் அணியாமல் வலம் வருவதை பார்க்க முடிகிறது. கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து பூங்காங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் குமரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் மூடப்பட்டன. நாகர்கோவிலில் வேப்பமூடு பூங்கா  உட்பட 42 பூங்காக்கள் பொதுமக்கள் பார்வைக்கு மூடப்பட்டன. வேப்பமூடு பூங்காவில் வாகனங்கள் பார்க்கிங் செய்யும் வசதிகாக முன்புற கேட் மட்டும் திறந்து வைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதை தவிர்க்குமாறும், முககவசம் கண்டிப்பாக அணியுமாறும் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

Tags : Nagercoil ,Kumari ,
× RELATED அரசியல் கட்சிகள் பணம் கொண்டு வருவதை...