கீழ்பென்னாத்தூர் வெறையூரில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை அமைக்க வேண்டும் துணை சபாநாயகர் பிச்சாண்டி பேச்சு மகளிர் சுயஉதவி குழுக்களின் கோரிக்கை ஏற்று

சென்னை, ஜன.7: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான பிச்சாண்டி பேசுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலே வெறையூர் கிராமத்தை சுற்றி ஏராளமான கிராம மக்கள் இருக்கிறார்கள். அங்கேயிருக்கின்ற மகளிர் எல்லாம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் பெற்ற கடன்களைக் கட்டுவதற்கு திருவண்ணாமலைக்கு பஸ் ஏறி செல்லக்கூடிய ஒரு நிலை இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே, மகளிர் சுய உதவி குழுக்களினுடைய கோரிக்கையாக வெறையூரிலே மத்திய கூட்டுறவு வங்கியினுடைய கிளை அமைக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சொன்னதற்கு நன்றி. ஆனால், அந்தக் கோரிக்கை இந்த ஆண்டே நிறைவேற்றப்படுமா?

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி: திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை, வேட்டவலம், இன்னும் சுற்றியிருக்கின்ற பல பகுதிகளில் வங்கி வசதிகள் நிறைய இருக்கின்றன. ஆனால் வெறையூரை பொறுத்தளவில் ஏறத்தாழ 12,20 கிலோ மீட்டர் வரை தூரம் அதிகமாக இருக்கிறது. அதிலும் அங்கு வணிக வங்கிகள் இல்லை. வெறையூரில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா தான் இருக்கிறது. எனவே, அவசியமாக மத்திய கூட்டுறவு வங்கியின் மூலமாக அங்கே கிளை அமைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர் சொன்னதை போல, துணை சபாநாயகரின் முதல் கேள்விக்கு பரிசாக இந்த வங்கியினுடைய கிளை துவங்கப்படும். கு.பிச்சாண்டி: அந்த வங்கியை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறதா?. அதிலும் குறிப்பாக ஆர்டிஜிஎஸ், ஏடி.எம், எஸ்எம்ஸ் அலர்ட் போன்ற பல்வேறு நவீன வசதிகளையெல்லாம் தந்து கொண்டிருக்கின்றன. அதேபோல கூட்டுறவு வங்கி அமைக்கப்படும்போது அது கம்ப்யூட்டர் மையமாக இந்த வசதிகளை எல்லாம் வழங்கக்கூடிய வகையில் புதிதாக அமைக்கப்படுகின்ற கிளை அமைக்கப்படுமா? அமைச்சர் ஐ.பெரியசாமி: தற்சமயம் அங்கே வங்கியினுடைய கிளையை துவங்குவதற்கு வாடகைக் கட்டிடம் இந்த வசதிகளையெல்லாம் பொருத்துகின்ற அளவிற்கு பார்க்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணிகள் இப்பொழுது நம்முடைய துறையினுடைய மாவட்ட வங்கி மேலாளர் மூலமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: