சென்னையிலிருந்து ஜெய்ப்பூர் சென்றபோது மிஸ்சிங் விமானத்தில் மாயமான சூட்கேஸ் பெண் பயணி 2 மாதமாக தவிப்பு: அலைக்கழிக்கும் விமான நிறுவனம்

சென்னை: சென்னையிலிருந்து ஜெய்ப்பூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண் பயணியின் சூட்கேஸ் மாயமாகி விட்டது. 2 மாதங்களாக சூட்கேஸ் கிடைக்காமல் தவிக்கிறார். விமான நிறுவனமும், ஏர்போர்ட் அத்தாரிட்டியும் அலைக்கழிப்பதால் சூட்கேசை இழந்த பயணி சென்னை விமானநிலைய போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை கிண்டியை சேர்ந்த பெண் ரூபாசிங் (39). கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி சென்னையிலிருந்து ஜெய்ப்பூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருடைய சூட்கேஸ் ஒன்று செக்இன் லக்கேஜ்யாக விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால், ஜெய்ப்பூருக்கு விமானம் சென்றபோது, ரூபாசிங்கின் சூட்கேஸ் மட்டும் வரவில்லை. இதையடுத்து ரூபாசிங் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் புகார் செய்தார்.

அதற்கு ஏர்லைன்ஸ் நிறுவனம், அந்த சூட்கேஸ் சென்னையிலிருந்து ஐதராபாத் வழியாக ஜெய்ப்பூர் வரும் விமானத்தில் ஏற்றி அனுப்பியிருக்கிறோம். எனவே தாமதமாக வந்து சேரும் என்று பதில் கூறியுள்ளனர். ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாகியும் சூட்கேஸ் ரூபாசிங்கிற்கு வந்து சேரவில்லை. இதையடுத்து ரூபாசிங் ஜெய்ப்பூர் விமானநிலைய அதிகாரிகளை கேட்டபோது, இது சென்னை விமானநிலையம் சம்பந்தப்பட்டது. எனவே சென்னையில்தான் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டனர். தொடர்ந்து, ரூபாசிங் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொண்டார்.

அதற்கு இண்டிகோ நிறுவனம் லக்கேஜ் மிஸ்சிங் என்றால், சென்னை ஏர்போர்ட் அத்தாரிட்டியிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டனர். ஏர்போர்ட் அத்தாரிட்டி, நாங்கள் பொறுப்பு அல்ல. ஏர்லைன்ஸ் நிறுவனம் தான் பொறுப்பு என்று 2 மாதமாக மாறிமாறி அலைக்கழித்தனர். இதை தொடர்ந்து, ரூபாசிங் சென்னை விமானநிலைய போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் காணாமல் போன எனது சூட்கேசில் விலையுயர்ந்த பொருட்கள் உள்ளன. எனவே போலீசார் எனது சூட்கேசை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: