சென்னை ரேலா மருத்துவமனையில் சிறுவனுக்கு சிறுகுடல் மாற்று சிகிச்சை: ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது

சென்னை: பெங்களூருவை சேர்ந்த 4 வயது சிறுவன் குகன். இவனுக்கு தொடர்ந்து 2 நாட்கள் வாந்தி ஏற்பட்டது. இதனால், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனையில், சிறுகுடல் சுருண்டு அடைப்பு ஏற்பட்டு, குடல் வளையம் செயல்படாமல் முற்றிலும் சிதைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டது. அங்கு அனுமதிக்கப்பட்ட சிறுவன் குகனை பரிசோதித்த டாக்டர்கள், குடல் மாற்று அறுவை சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர். உடனே, அவனது தந்தை சுவாமிநாதன், அவரது சிறுகுடலின் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கினார்.

மிகவும் அரிதான இந்த அறுவை சிகிச்சையை பேராசிரியர் முகமது ரேலா தலைமையிலான மருத்துவர்கள் குழு கடந்த செப்டம்பர் 13ம் தேதி செய்தது. சுமார் 7 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் அவனது தந்தையின் 150 செ.மீ. சிறு குடல் அவனது வயிற்றில் பொருத்தப்பட்டது. ஒரு சில மாதங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து நரம்பு மூலம் வழங்கப்பட்டது. 5 வாரம் வாய் வழியான உணவு வழங்கப்பட்டது. தற்போது அந்த சிறுவன் பூரண குணமடைந்து சிறுகுடல் நன்றாக வேலை செய்வதால் மற்ற குழந்தைகளைப் போல விரும்பும் உணவைச் சாப்பிடலாம். அவனது தந்தை சுவாமிநாதனும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி தனது வழக்கமான பணிகளை செய்து வருகிறார்.

அரிய சிறுகுடல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சிறுவனை மற்ற குழந்தைகளைப் போல் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ரேலா மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார். அப்போது, குழந்தைகளுக்கான கல்லீரல், பித்த நாள சிகிச்சைக்கான மூத்த ஆலோசகர் டாக்டர் நரேஷ் சண்முகம், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: