×

என்டிசி ஆலைகளை உடனடியாக இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோவை: தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமாக நாடு முழுவதும் 26 ஆலைகள் உள்ளன. இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கின்போது இந்த ஆலைகள் மூடப்பட்டன. ஆலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டது. பின்னர், கொரோனா தொற்று குறைந்து தொழிற்சாலைகள் பல திறக்கப்பட்ட நிலையில் பஞ்சாலைகள் மட்டும் திறக்கப்படாமல் உள்ளது. தவிர, கடந்த 3 மாதங்களாக பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கங்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், கோவையில் உள்ள என்டிசி ஆலைகளை உடனடியாக இயக்கக்கோரியும், ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கக்கோரியும் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன் முன்னிலை வகித்தார். இதில், போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சச்சின் கலந்து கொண்டு பேசுகையில், \”மத்திய அரசு என்டிசி ஆலைகளை இயக்க முன் வராததால்  தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே, என்டிசி ஆலைகளை மீண்டும் இயக்கக்கோரி வரும் 26-ம் தேதி என்டிசி ஆலை தொழிலாளர்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்\” என்றார்.

Tags : NTC ,
× RELATED ஒன்றிய அரசால் முடக்கப்பட்ட என்டிசி...