×

ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட 15 டன் அஷ்டநாக கல் கருட பகவான் சிலை: ராணிப்பேட்டையில் பிரதிஷ்டை செய்ய புறப்பட்டது

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை, அம்பாள் நகரில் பிரகாஷ் சிற்ப கலைகூடம் உள்ளது. இங்கு, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள கீழ் புதுப்பேட்டை எனும் கிராமத்தில் ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி சமேத தன்வந்திரி பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், பிரதிஷ்டை செய்வதற்காக 88வதுசன்னதியாக 16.8 அடி உயரம், சுமார் 7 அடி அகலத்தில் அஷ்டநாக கல் கருட பகவான் சிலை ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதன்படி, 15 டன் எடையில் ஒரே கல்லில் 16.8 அடி உயரம், 7 அடி அகலத்தில் நின்ற கோலத்தில் அஷ்ட நாககல் கருட பகவான் சிலையை, லோகநாதன் ஸ்தபதி மற்றும் 10க்கும் மேற்பட்ட சிற்பிகள் கடந்த 12 மாதமாக வடிவமைத்தனர். சிலை செதுக்கும் பணி முழுமையாக முடிந்து நேற்று ராணிப்பேட்டை கொண்டு செல்லப் பட்டது.

இதையொட்டி, சைவ ஆகம முறைப்படி 3 கால பூஜைகள் செய்து லோகநாதன் ஸ்தபதி தலைமையில் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டு அனுப்பி வைத்தனர். அப்போது, வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபட்டனர். இந்த சிலை வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் கும்பாபிஷேகம் செய்து, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம்: திருக்கழுக்குன்றம், நெம்மேலி, செங்கல்பட்டு, வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது, வாலாஜாபாத் பஸ் நிலையம், முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களால் உற்சாக வரவேற்பு அளித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

காஞ்சிபுரம் எஸ் எம் சில்க்ஸ் உரிமையாளர் மனோகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பு பூஜைகள் செய்தனர். வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் திருக்கழுக்குன்றம் பைரவர் உபாசகர் அன்புச்செழியன் சுவாமிகள், தொழிலதிபர்கள் வேலாயுதம், பாண்டியன், மனோகர் உட்பட பக்தர்கள் பலர் வழிபட்டனர்.

இதுகுறித்து தன்வந்தரி ஆரோக்கிய பீடத்தின் ஸ்தாபகர் முரளீதர சுவாமிகள் கூறுகையில், பட்சிராஜாவாக இருப்பவர் கருடன். மாமல்லபுரத்தில் செய்யப்பட்ட இந்த அஷ்டநாக கல் கருட பகவானை வணங்கினால் சர்ப்பதோஷங்கள், திருமணம், புத்திரத்தடை,விஷ ஜந்துக்களால் ஏற்படும் தோஷங்கள், வாகன விபத்துகள், தோல் வியாதிகள் ஆகியவை அகலும். மனக்குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும் என்றார்.

Tags : Lord Karuta ,Ranipettai ,
× RELATED சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு...