×

முதல்வருக்கு ரூபி மனோகரன் எம்எல்ஏ வேண்டுகோள் களக்காடு பகுதியில் அரசு சார்பில் நேந்திரன் சிப்ஸ் உற்பத்தி ஆலை

நெல்லை, ஜன. 6:  நாங்குநேரி ரூபி மனோகரன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக நேந்திரன் ரக வாழை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள், வாழை ஒன்றையே தங்களது வாழ்வாதாரமாக நம்பி அவற்றை சாகுபடி செய்கின்றனர். வருடம் முழுக்க வாழைக்கு செலவு செய்து, வாழைத்தார்களை உற்பத்தி செய்யும்போது, அவற்றுக்குப் போதிய விலை கிடைக்காமல் போய்விடுகிறது. வாழை சாகுபடிக்கு ஆன மொத்தச் செலவையும், வாழைத்தார் விலைக்குப் போன கணக்கையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பல நேரங்களில் நஷ்டமே மிஞ்சுகிறது. அதனால், களக்காடு பகுதி வாழைத்தார் விவசாயிகளின் நலன் கருதி, களக்காடு பகுதியில் அரசு சார்பில், நேந்திரன் வாழைக்காயில் இருந்து நேந்திரன் சிப்ஸ் உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவ வேண்டும். அதோடு, அந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் நேந்திரன் சிப்ஸை, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு நியாய விலைக்கடைகளில் மக்களுக்கு நியாயமான விலையில் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். களக்காடு பகுதியில் நேந்திரன் சிப்ஸ் உற்பத்தி ஆலை அரசு சார்பில் அமைந்தால், இப்பகுதியில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். வாழைத்தார் விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்கும். விவசாயிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி, களக்காடு பகுதியில் அரசு சார்பில் நேந்திரன் சிப்ஸ் உற்பத்தி ஆலை அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Ruby Manokaran ,MLA ,Nendran ,Kalakadu ,
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்