×

ஒன்றிய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

திருவாரூர், ஜன. 6: ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் நேற்று நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ/30 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும். கடும் மழை காரணமாக வேலை இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும். மழையினால் சேதமடைந்து வாழ்வதற்கு தகுதி இல்லாமல் இருந்து வரும் தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும். கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழக அரசு கோரியுள்ள ரூ.4 ஆயிரத்து 625 கோடி நிவாரண தொகையை ஒன்றிய அரசு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும், தொகையை உடனடியாக விடுவிக்க கோரியும் திருவாரூரில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

விவசாய சங்க மாநில செயலாளர் சாமிநடராஜன் தலைமையிலும், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தினை கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி துவக்கி வைத்து பேசினார். இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், மாவட்ட தலைவர் தம்புசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குமாரராஜா, மாவட்ட தலைவர் கலைமணி மற்றும் பொறுப்பாளர்கள் கந்தசாமி, பாலையா, சேகர், சாமிநாதன் உட்பட 500க்கும் மேற்பட்ட விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். மாலை வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : U.S. government ,
× RELATED அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி...