×

கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

நாகை, ஜன.6: மழையால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் வசந்தாமணி ஆகியோர் தலைமை வகித்தனர். மழையால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வெள்ளத்தால் வேலையிழந்த விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு வேலையில்லா கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். சேதமடைந்து குடி இருக்க தகுதியற்ற வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். பயிர் காப்பீடு செய்து விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். தமிழக அரசு கோரியுள்ள நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். கீழ்வேளூர்: தமிழ்நாடு விவசாயிகள் கங்கம், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் விவசாய சங்க ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பரமணியன் தலைமையில் தேவூர் கடைத் தெருவில் கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நாகராஜன், விவசாய சங்க ஒன்றிய குழு உறுப்பினர் பரமசிவம், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் காசிநாதன், துணை செயலாளர் ராஜப்பா மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட 25 பேரை கைது செய்தனர்.

Tags : Collector's Office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்