×

பொய் வழக்கு போடுவதாக கூறி விருத்தாசலம் காவல் நிலையத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை

விருத்தாசலம், ஜன. 6: விருத்தாசலம் அருகே குப்பநத்தம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்ததில் இருந்து இரண்டு தரப்பினர் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக விருத்தாசலம் போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், கைது செய்வதும் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒரு சில மாதமாக எந்த பிரச்னையும் இல்லாத சூழ்நிலையில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக அப்பகுதியில் விருத்தாசலம் போலீசார் ரோந்தில் ஈடுபட்டு சிலரைப் பிடித்து வழக்கு பதிந்து உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்றும் அப்பகுதிக்குச் சென்ற போலீசார் வேலைக்கு செல்லும் இளைஞர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என பலரை பிடித்து காவல் நிலையம் கொண்டு செல்ல முயற்சித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை விடுவிக்க செய்தனர்.

 அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விருத்தாசலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்நிலையம் முன் அமர்ந்து போலீசாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அவர்களிடம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒருவர் தான் எடுத்து வந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். உடனே அங்கிருந்த போலீசார் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவரை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து, இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் கூறியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Vriddhachalam police station ,
× RELATED புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருத்தாசலம் காவல்நிலையம் முற்றுகை