முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டின் முன்பு பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு 12ம் தேதிக்கு தீர்ப்பு தள்ளி வைப்பு

புதுச்சேரி, ஜன. 6: முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டின் முன்பு பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் புதுச்சேரி கோர்ட்டில் தீர்ப்பு 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் வீடு எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ளது. இவர் கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது இணை அமைச்சராக பதவி வகித்தார். அதே ஆண்டு ஜனவரி 29ம் தேதி அவரது வீட்டின் முன் காருக்கு அடியில் ஆர்டிஎக்ஸ் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ), தமிழ்நாடு விடுதலை படையை சேர்ந்த திருச்செல்வம் என்ற குமார் சங்கர் முரளி (36), தங்கராஜ் என்ற தமிழரசன் (38), கவியரசன் என்ற ராசா (29), காளைலிங்கம் என்ற காளை (37), கார்த்திக் என்ற ஆதிஜீவா (28), ஜான் மார்ட்டின் என்ற ஜான் இளந்தனால் (23) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இவ்வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கை விசாரிக்கும் புதுச்சேரி தலைமை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் 80க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருதரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், கடந்த டிசம்பர் 21ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக கடலூர், வேலூர், சென்னை புழல் சிறைகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் பலத்த துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் புதுவை தலைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து தீர்ப்பை வருகிற ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளி வைத்து தலைமை நீதிபதி செல்வநாதன் உத்தரவிட்டார்.இதற்கிடையே, நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணையை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் குற்றவாளிகள் நேற்று ஆஜர்படுத்தப்படவில்லை. எனவே, தீர்ப்பு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. வரும் 12ம் தேதிக்கு தீர்ப்பினை தள்ளி வைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: