இறுதி பட்டியல் வெளியீடு 9 தொகுதிகளில் 21,69,492 வாக்காளர்கள்

கடலூர், ஜன. 6: கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் 21 லட்சத்து 69 ஆயிரத்து 492 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை முதன்மை தேர்தல் அலுவலர் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி 1.1.2022 தகுதி நாளாக கொண்டு கடலூர் மாவட்டத்தில் கடந்த 1.11.2019 முதல் 30.11.2021 வரையிலான காலத்தில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டது. இதை தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் 2022ம் ஆண்டிற்கான வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் நேற்று வெளியிட்டார்.

2,307 வாக்குச்சாவடிகளில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 363 ஆண் வாக்காளர்களும், 11 லட்சத்து 2 ஆயிரத்து 876 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினமாக 253 பேரும் என 21 லட்சத்து 69 ஆயிரத்து 492 பேர் வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சியில் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் குமார், தேமுதிக சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் லெனின், சிபிஎம் மாவட்ட செயலாளர் மாதவன், சிபிஐ குளோப், பகுஜன் சமாஜ் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம்: விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் ராம்குமார் வெளியிட்டார். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், தாசில்தார்கள் விருத்தாசலம் சிவகுமார், திட்டக்குடி தமிழ்செல்வி, துணை தாசில்தார்கள் விருத்தாசலம் வேல்முருகன், திட்டக்குடி ஜெயச்சந்திரன், தேர்தல் பிரிவு கணினி இயக்குனர்கள் விருத்தாசலம் சுரேஷ் உள்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

சிதம்பரம்: சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கோட்டாட்சியர் ரவி வெளியிட்டார்.புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 679 வாக்காளர்கள் உள்ளனர். சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 575 வாக்காளர்கள் உள்ளனர். இதுபோல் காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 752 வாக்காளர்கள் உள்ளனர். இந்த 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக அளவில் உள்ளனர். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வக்குமார், தாசில்தார்கள் ஆனந்த், அன்பழகன், ராமதாஸ், தேர்தல் துணை தாசில்தார்கள் ரத்தினகுமார், பிரகாஷ், ராஜகணபதி, தனலட்சுமி, தேர்தல் பிரிவு அலுவலர்கள் ரவி, சூர்யா, காமராஜ், பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: