பெரணமல்லூர் அருகே மின் மோட்டார் ஒயர் திருட்டு குடிநீர் விநியோகம் பாதிப்பால் பொதுமக்கள் அவதி

பெரணமல்லூர், ஜன.6: பெரணமல்லூர் அருகே ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்ட குடிநீர் கிணற்றின் மின் மோட்டார் பம்ப் ஒயரை மர்ம நபர்கள் திருடி சென்றதால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. பெரணமல்லூர் அடுத்த முனுகப்பட்டு பகுதியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அருகிலுள்ள ஆற்றுப்படுகையில் ஒரு ஆழ்துளை கிணறு மற்றும் நான்கு திறந்தவெளி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் மோட்டர் பம்ப் ஆப்ரேட்டர் சேட்டு தண்ணீர் விநியோகம் செய்ய மோட்டாரை இயக்கி உள்ளார். ஆனால் மோட்டார் இயங்காமல் இருப்பதை கண்டு மோட்டார் பம்ப் அறைக்கு சென்று பார்த்தபோது மோட்டார் பம்பில் இணைக்கப்பட்டிருந்த ஒயர் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அதேபோல் அங்கிருந்த நான்கு மோட்டார் பம்புகளிலும் ஒயர் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் வேலுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து ஊராட்சி தலைவர் வேலு மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆற்றுபடுக்கைக்கு சென்று பார்த்தனர். இதில் ஊராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் அனைத்து மோட்டார்களிலும் ஒயர் திருடப்பட்டு இருந்தது. இந்த ஒயரின் நீளம் சுமார் 450 மீட்டர் என்றும், மதிப்பு சுமார் ₹70 ஆயிரம் இருக்கும் என அப்போது தெரிவித்தார். குறிப்பாக மின் ஒயரை திருடிய மர்ம நபர்கள் ஆற்றுப்படுகையில் சவகாசமாக அமர்ந்து மின்ஒயரில் மேல் இருந்த பிளாஸ்டிக் பகுதியை அகற்றி உள்ளிருந்த செம்புஒயரை மட்டும் உருவி சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து ஊராட்சி தலைவர் சேட்டு பெரணமல்லூர் போலீஸ் மற்றும் செய்யாறு பிடிஓ அலுவலகத்திற்கு தகவல் அளித்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி மற்றும் பிடிஓ மயில்வாகனன் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரித்தனர். மேலும் பிடிஓ உடனடியாக மாற்று ஒயர் ஏற்பாடு செய்து குடிநீர் விநியோகம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஒரே சமயத்தில் அனைத்து குடிநீர் கிணறு மோட்டார் பம்ப் ஒயர்கள் திருடப்பட்ட இருந்ததால் நேற்று காலை முதல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.

Related Stories: