திருமண நிகழ்வுகள் தொடர்பாக இணையதளத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்: மண்டப உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அவற்றை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பொதுமக்கள் முறையாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் இருந்து வந்தனர். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்கின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதையடுத்து 15 மண்டலங்களில் தலா மூன்று குழுக்கள் வாரியாக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் மாநகராட்சி, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் அதிக கூடும் நிகழ்ச்சிகள் மற்றும் திருமண நிகழ்வுகள் தொடர்பாக மாநகராட்சி இணையதளத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் திருமண நிகழ்வுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கோயில்கள், ஓட்டல்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்தும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: