×

அதிமுக ஆட்சியில் சீரமைப்பின் பேரில் அடித்து நொறுக்கியதால் தற்போதைய பாலம் ‘வீக்’ திருச்சி காவிரி ஆற்றின் குறுக்ேக புதிய பாலம் ரூ.130 கோடியில் ஓராண்டுக்குள் கட்டப்படும்

திருச்சி, ஜன.5: திருச்சி-ரங்கம் மாம்பழச்சாலை இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இப்பாலம் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. இப்பாலத்தில் சீரமைப்பு செய்வதாக கூறி கடந்த அதிமுக ஆட்சியில் பாலத்திலிருந்த சிமென்ட் சாலைகள் உடைத்தெடுக்கப்பட்டன. தார்சாலை போடப்பட்டது. காவிரி ஆற்றின் அழகை காணும் வகையில் இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டிருந்த பக்கவாட்டுச்சுவர்கள் முழுமையாக அடைக்கப்பட்டன. இது அப்போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தினகரன் நாளிதழில் அப்போதே செய்தி வெளியிடப்பட்டு, பக்கவாட்டுச்சுவர்கள் மீண்டும் காவிரி ஆறு தெரியும்படி இடைவெளியுடன் அமைக்கப்பட்டது. ஆனால், பாலத்தின் சிமென்ட் சாலையை அடித்து உடைத்ததன் காரணத்தால் பாலம் பலவீனமடைந்தது. தொடர்ந்து வாகனங்கள் செல்லச்செல்ல அதன் அதிர்வு காரணமாக சாலைகள் பெயர்ந்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தற்போதுள்ள காவிரி பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் அமைக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. தற்போது திருச்சி-ரங்கம் காவிரி பாலம் அருகே ரூ.130 கோடியில் புதிய பாலம் கட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே தற்போதுள்ள காவிரி பாலம் சேதமடைந்திருப்பதை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: திருச்சி-ரங்கம் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.130 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்காக விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) போடப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விட்டு ஓராண்டில் புதிய பாலம் அமைக்கப்படும். திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது 1976ல் தற்போதுள்ள பாலம் கட்டப்பட்டது. ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் பாலத்தை சீரமைக்கிறேன் என்ற பெயரில் நன்றாக இருந்த இந்த பாலத்தை சம்மட்டி கொண்டு அடித்து உடைத்தனர். அதனால்தான் இந்தளவுக்கு பாலம் பலவீனமாக உள்ளது. தற்போது சிதலமடைந்து கிடக்கும் இப்பாலம் 4 மாதத்தில் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது கலெக்டர் சிவராசு, நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, என்ஐடி பேராசிரியர் பாஸ்கர், மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான், எம்எல்ஏக்கள் இனிகோஇருதயராஜ், சவுந்தரபாண்டியன், அப்துல்சமது, திமுக மாநகர செயலாளர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Trichy Cauvery River ,AIADMK ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...