ஒமிக்ரான் தொற்றில் இருந்து மக்களை காக்க முதல்வர் ஓய்வின்றி உழைப்பு

பொன்னமராவதி, ஜன. 5: புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன் முதலாக ஆலவயலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை சட்ட அமைச்சர் ரகுபதி வழங்கி பேசுகையில் ஒமிக்ரான் தொற்றில் இருந்து மக்களை காக்க முதல்வர் ஓய்வின்றி உழைத்து வருகிறார் என்று கூறினார். பொன்னமராவதி அருகே ஆலவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் உமா மகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், ஒன்றியக் குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் தனலட்சுமி அழகப்பன், ஊராட்சித்தலைவர் சந்திரா சக்திவேல், கூட்டுறவு சங்கத்தலைவர் பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பொங்கல் தொகுப்பினை சட்ட அமைச்சர் ரகுபதி வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் துணிப் பைகளில் விளம்பரம் தேடாமல் பொதுமக்களின் உள்ளங்களில் ,இடம் பெற்றுள்ள முதல்வராக திகழ்கிறார். ஏற்கனவே நாட்டு மக்களின் முதல்வராகவும், மக்களுக்கு நன்மை செய்கின்ற முதல்வராகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழும் முதல்வராகவும், சிறப்பான பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகின்ற முதல்வராகவும் திகழ்கிறார். மேலும் தமிழகத்தை மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளிலிருந்து மீட்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஓய்வில்லாமல் பாடுபட்டு வருகிறார்.

முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற நாள்முதல் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவுகின்ற நிலையில், அதனையும் எதிர்கொண்டு நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கு முதலமைச்சர் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார். எனவே பொதுமக்கள் அனைவரும் கைகழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது 711 முழுநேர நியாய விலைக்கடைகளும், 317 பகுதிநேர நியாய விலைக்கடைகளும் என மொத்தம் 1,028 நியாய விலைக்கடைகள் உள்ளது. மாவட்டத்தில் 12 வட்டாரங்களில் 4,30,701 அரிசி பெறும் குடும்ப அட்டையும், 44,289 குடும்ப அட்டையும், 892 காவலர் குடும்ப அட்டையும், 6,305 குடும்ப அட்டையும், 968 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் குடும்ப அட்டையும் என மொத்தம் 4,83,155 குடும்ப அட்டைகள் உள்ளது.

இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு அந்தந்த நியாய விலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இதே போல திருமயம் ஒன்றியம் துளையானூரில் பொங்கல் தொகுப்பினை சட்ட அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

கண்டியாநத்தம்:

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ரேசன்கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சித்தலைவர் செல்வி தலைமை வகித்தார். மிராஸ் ரவீந்திரன் அம்பலம் முன்னிலை வகித்தார். பொன்னமராவதி வட்ட வழங்கல் அலுவலர் திருப்பதி வெங்கடாசலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் வட்ட வழங்கல் அலுவலக பொறியாளர் கார்த்திக், வார்டு உறுப்பினர்கள் அழகப்பன், சரோஜாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: