×

இலங்கை கடற்படை சிறைபிடித்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேருக்கு 18ம் தேதி வரை காவல்

அறந்தாங்கி, ஜன.5: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேருக்கும் வரும் 18ம் தேதி வரை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளதால், மீனவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் திரும்ப முடியாததால் உறவினர்கள் வேதனை அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து கடந்த மாதம் 20ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த வாசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற இருளப்பன், ராஜா, அய்யனார், விஜயேந்திரன், ராம்குமார், மணிகண்டன் உள்ளிட்ட 6 மீனவர்கள், நாகை மாவட்டம் சின்னங்குடியை சேர்ந்த பிரதீப் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற பிரதீப், அருண், செல்லஞ்செட்டி, சந்தோஷ், வீரபாண்டியன், சஞ்சய், ஆகாஷ் ஆகிய 7 மீனவர்கள் உள்ளிட்ட 13 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட 13 மீனவர்களையும் மயிலட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் பின்னர் அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரித்த நீதிபதி, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக 13 மீனவர்களையும் நேற்று வரை (அதாவது ஜனவரி மாதம் 4ம் தேதி வரை) சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நீதிமன்றத்தின் காவல் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி, ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேரையும் இம்மாதம் 18ம் தேதி வரை சிறையில் வைக்க காலநீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் பொங்கல் பண்டிகைக்குள் விடுதலை செய்வார்கள் என மீனவர்களின் குடும்பத்தினர் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் நீதிமன்றம் காவலை நீடித்து உத்தரவிட்டதை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் பொங்கல் பண்டிகைக்குள் ஊர் திரும்ப வாய்ப்பு இல்லாததால், மீனவர்களின் குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags : Sri Lankan Navy ,Jegathapattinam ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!