பொன்னமராவதி, ஜன.5: பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி மற்றும் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள 15-18 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பொன்னமராவதி பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையில் டாக்டர் அருண்குமார் முன்னிலையில் பொன்னமராவதி பகுதியில் பள்ளியில் பயிலும் 15 முதல் 18 வயது வரை மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. பொன்னமராவதி மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் டாக்டர் நிர்மல்நாதன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் உத்தமன் பகுதி செவிலியர் கோட்டை திலகம், சுகாதார செவிலியர் ராணி ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் 106 பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடுப்பூசி போடப்பட்டது. ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் ஸ்வேதா தலைமையிலான மருத்துவக் குழுவினர் 55 பேர்களுக்கும், பொன்னமராவதி தனியார் மேனிலைப்பள்ளியில் டாக்டர் ரவிக்குமார் தலைமையில் 99 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் பள்ளி மாணவர்களின் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் படி தடுப்பூசி செலுத்தப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தெரிவித்தார்.