காரைக்கால், ஜன.5: கொரோனா 3வது அலைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும்படி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பினை மேம்படுத்த பிரதமர் அறிவுறுத்தியுள்ள நிலையில் புதுச்சேரி கோவிட் மேலாண்மை உயர்நிலைக்குழு கூட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை நிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் தலைமை தாங்கினார். வளர்ச்சி ஆணையர் பிரசாந்த் கோயல், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், செய்தித்துறை செயலர் வல்லவன், துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌதரி, சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமுலு, கோவிட் தலைமை அதிகாரி டாக்டர் ரமேஷ், உலக சுகாதார நிறுவனத்தின் புதுச்சேரி பிரதிநிதி டாக்டர் சாய்ராபானு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.