×

தோகைமலை பகுதியில் 11 பேக்கரிகளுக்கு அபராதம்

தோகைமலை, ஜன. 5: கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து அபராதம் விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தோகைமலை, கழுகூர், நாகனூர், காவல்காரன்பட்டி, நெய்தலூர், பேரூர், கீழவெளியூர் மற்றும் கொசூர் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேக்கரி கடைகள் செயல்பட்டு வருகிறது.  இந்த கடைகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் பல்வேறு வகையான தின்பண்டங்கள் அதிகமான அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான தின்பண்டங்களுக்கு தயாரிப்பு தேதி மற்றும் அப்பொருட்கள் பயன்படுத்தும் காலாவதி ஆகும் தேதிகள் குறிப்பிடாமல் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு கூட்டத்தில் தோகைமலை பகுதியில் இருந்து பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் பொதுமக்கள் பயன்படுத்தும் தின்பண்டங்களுக்கு தயாரிப்பு தேதி மற்றும் அப்பொருட்கள் பயன்படுத்தும் காலாவதி தேதிகள் குறிப்பிடாமல் விற்பனை செய்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி கடைகளை உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கலைவாணி தலைமையில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பேக்கரி கடைகளில் அடுக்கி வைத்திருந்த தின்பண்டங்களை ஆய்வு செய்ததில் தின்பண்டங்களுக்கு தயாரிப்பு தேதி மற்றும் தனிபண்டங்களை பயன்படுத்தும் காலாவதி தேதிகள் குறிப்பிடாமல் விற்பனை செய்வதற்காக வைத்து இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் காலாவதி ஆன குளிர்பானங்களும் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக அடுக்கி வைத்திருந்தனர். காலாவதியான தின்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தி அழித்தனர். மேலும் கடைகள் நடத்துவதற்கான உரிமங்களும் இல்லாமல் போலியான உரிமங்கள் வைத்துக்கொண்டு பேக்கரி கடைகள் செயல்பட்டதும் ஆய்வில் கண்டறிந்தனர். இதனை அடுத்து 11 பேக்கரி கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.33 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர் ராமமூர;த்தி உள்பட பலர் உடனிருந்தனர். இதனால் தோகைமலை பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tokaimalai ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு