தமிழகம் முழுவதும் பெருநகரங்களில் பயோ-மைனிங் முறையில் குப்பை பிரிப்பு அமைச்சர் கேஎன் நேரு தகவல்

கடலூர், ஜன. 5: தமிழகத்தில் அனைத்து பெருநகரங்களிலும் பயோ-மைனிங் முறையில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். கடலூர் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கடலூரில் ஆய்வு நடத்திய பின் அவர் கூறுகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக நெய்வேலி என்எல்சியில் இருந்து கிடைக்கும் உபரிநீரை 740 குடியிருப்புகளுக்கு குடிநீராக வழங்கும் திட்டம் ரூ.479 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலமாக தினந்தோறும் 31 மி.லிட்டர் குடிநீர் 179 நீர்த்தேக்கத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலமாக குடியிருப்புகளுக்கு வழங்கப்படும். இதனால், 5.45 லட்சம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கும்.

இதேப்போன்று சிதம்பரம் நகரத்தில் ரூ.140 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகராட்சிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். அதன்படி, அடிப்படை வசதிகளை மேம்படுத்த அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு வேலைகள் நடந்து வருகின்றன. அப்பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தமிழகத்தில் அனைத்து பெருநகரங்களிலும் குப்பை கொட்டுவது பெரும் பிரச்னையாக உள்ளது. குடியிருப்புகளின் அருகே குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

எனவே, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பயோ-மைனிங் முறையில் உடனடியாக குப்பைகளை தரம் பிரித்து மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து, மக்கும் குப்பைகளை உரமாக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது என்றார். அப்போது அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், எம்எல்ஏக்கள் சபா ராஜேந்திரன், வேல்முருகன், ஐயப்பன், கடலூர் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன், மாணவரணி நடராஜன், அகஸ்டின், கதிர்காமன், விஆர் அறக்கட்டளை விஜயசுந்தரம், டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிரகாஷ், , பண்ருட்டி நகர செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: