பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போட்டப்பிறகுதான் பொதுத்தேர்வு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

விழுப்புரம், ஜன. 5: விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறைஅமைச்சர் பொன்முடி பேசினார். அமைச்சர் மஸ்தான், துணை சபாநாயகர் பிச்சாண்டி, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், ஆட்சியர் மோகன், எம்பிக்கள் அண்ணாதுரை, விஷ்ணுபிரசாந்த், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார், கிரி, பாலாஜி, சரவணன், ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்கள் ஜெயச்சந்திரன், பார்வதி, துணை சேர்மன் ஷீலாதேவிசேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், கொரோனா காலங்களில் அதிகம் பாதித்த துறை கல்வித்துறைதான். விழுப்புரம் மாவட்டம் ஆரம்பக்கல்வியிலும், உயர்கல்வியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 15 முதல் 18 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் இம்மாவட்டம் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது, என்றார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், பள்ளி மாணவர்களுக்கு தனி பேருந்து வசதிகள் கொண்டு வரவேண்டும் என்றால் இது மிகப்பெரிய சவாலாகும். 48 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதை அமல்படுத்தவேண்டும் என்றால் 40 ஆயிரம் பேருந்துகள் இயக்க வேண்டும். அதனால் அந்தந்த வழித்தடத்தில் எந்த பேருந்து வருகிறதோ அதை எந்தெந்த பள்ளிகளுக்கு எப்படி அமல்படுத்தலாம் என்று போக்குவரத்து அமைச்சர், முதல்வரிடம் ஆலோசிக்கப்படும். மே மாதத்தில் பொது தேர்வு நடைபெறும். 15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்பு தேர்வு நடைபெறும். இதற்கு முன் மாரல் சைன்ஸ் இருந்தது. பாலியல் கல்வி குறித்து தனிப்பாடம் கொண்டு வரப்படும். குட் டச், பேட் டச் தெரியும் வகையில் கொண்டு வரப்படும். பெற்றோர்கள் பெண் குழந்தைகளை தைரியமாக பள்ளிக்கு அனுப்பலாம், என்றார்.

Related Stories: