×

விழுப்புரம் சிறுவன் மரண வழக்கு துப்பு கிடைக்காமல் திணறும் தனிப்படை சிபிசிஐடிக்கு மாற்ற வலுக்கும் கோரிக்கை சிசிடிவியில் சிக்கியும் கண்டுபிடிக்க முடியவில்லை


விழுப்புரம், ஜன. 5: விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் சிறுவன் இறந்து கிடந்த வழக்கில் கடந்த 20 நாட்களுக்கு மேலாகியும் துப்பு கிடைக்காமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர். இதனிடையே, இவ்வழக்கில் சிறப்பு புலன் விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும், இல்லையென்றால் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மேல் தெரு பகுதியில் உள்ள இஸ்திரி கடை தள்ளுவண்டியில் கடந்த 15ம் தேதியன்று 4 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். மேற்கு காவல்நிலைய போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்து போன சிறுவன் எந்த ஊர், உறவினர்கள் பற்றி எந்த தகவலும் விசாரணை நடத்தியும் கிடைக்காததால் 3 நாட்களுக்கு பிறகு பிரேத பரிசோதனை நடந்தது. பிரேத அறிக்கையில், சிறுவனின் உணவுக்குழாயில் 2 நாட்களாக உணவு, தண்ணீரில்லாமல் பட்டினியால் இறந்திருப்பதாக தெரிவித்திருந்தனர். தொடர்ந்து, இறந்து போன சிறுவன் யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுட்டனர்.

இதனிைடயே, சிறுவன் சட்டையில் எழுதப்பட்டிருந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக சிம்பலை வைத்து, மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகளில் வாட்ஸ்அப் மூலம் புகைப்படத்தை அனுப்பி விசாரணை நடத்தியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து சிறுவனை தூக்கிச் சென்ற 2 பேரின் சிசிடிவி காட்சிகள் போலீசாரிடம் சிக்கியது. அதை வைத்து கண்டுபிடித்து விடுவோம் என்று காவல்துறை நம்பிக்கை தெரிவித்தது. அதன்படி, உளுந்தூர்பேட்டை, ேசலம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், கடலூர் உள்ளிட்ட பகுதியில் முகாமிட்டு தனிப்படை விசாரணை நடத்தியும் சிசிடிவியில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், சிறுவன் கழுத்தில் அணிந்திருந்த தாயத்து, நாகூர் பகுதியில்தான் கட்டுவதாக போலீசாருக்கு வந்த தகவலையடுத்து சிதம்பரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் முகாமிட்டு தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

அதிலும், எந்தவித முன்னேற்றமும் கிடைக்கவில்லை. சிறுவனின் தரப்பிலும் துப்பு கிடைக்காததால் இவ்வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியாமல், ஆரம்ப கட்டத்திலேயே வைத்துக்கொண்டு தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர். சிறுவன் இறந்து ஒரு மாதத்தை நெருங்கிய நிலையில், இவ்வழக்கில் இதுவரை எந்தவித தகவலும் கிடைக்காமல் உள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்தாவது, அதில் சிக்கிய 2 பேரை பிடித்திருக்கலாம். அவர்களையும் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். காவல்துறைக்கு சவாலாக உள்ள இவ்வழக்கை கண்டுபிடிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் அல்லது சிபிசிஐடிக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Villupuram ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...