கிருஷ்ணன்கோவிலில் குழாய் உடைந்து தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் குடிநீர்

நாகர்கோவில், ஜன. 5:  கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையம் அருகே குடிநீர் குழாய் உடைந்து  தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பாய்கிறது. நாகர்கோவில் மாநகர பகுதி மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீரை சுத்தம் செய்து குடிநீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் தேவைகள் அதிரித்துள்ள நிலையில் புத்தன்அணை குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இருப்பினும் தொடக்ககாலத்தில் போடப்பட்ட முக்கடல் அணையில் இருந்து வரும் குடிநீர் குழாய் மற்றும் நாகர்கோவில் பகுதியில் போடப்பட்டு இருந்து குடிநீர் குழாய்கள் சேதமாகி அவ்வப்போது ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.  

 ஒழுகினசேரி முதல் பார்வதிபுரம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக இருந்து வந்தது. கடந்த 3 வருடத்திற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டபோது, இந்த பகுதியில் பாதாளசாக்கடை பணிக்கு குழாய் பதிக்கும் பணி நடந்ததால், சாலை சீரமைக்கப்படவில்ைல. இந்நிலையில் ஒழுகினசேரி முதல் பார்வதிபுரம் வரை பாதாளசாக்கடை, புத்தன்அணை குடிநீர் திட்டப்பணிக்கு குழாய்கள் பதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒழுகினசேரி முதல் பார்வதிபுரம் வரை உள்ள சாலை சீரமைக்கப்பட்டது. இதனால் கடந்த சில வருடமாக குண்டும் குழியுமாக இருந்த சாலை தற்போது நல்ல நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே தேசியநெடுஞ்சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீரின் அழுத்தத்தால் சாலை உடைந்தது. இதனால் சாலையில் தண்ணீர் ஓடுகிறது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு பெரியதாவதற்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம்  உடைப்பை சரிசெய்யவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் குடிநீர் குழாயை சரிசெய்ய சாலையை தோண்டிவிட்டு சாலையை சீரமைக்காமல் அப்படியே போட்டுவிட்டு செல்லாமல் சாலையை சீரமைக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: