நாகர்கோவிலில் கல்லூரி மாணவி மாயமான சம்பவத்தில் மர்மம் நீடிப்பு கோயிலுக்கு அழைத்து வந்த தம்பதி தலைமறைவு

நாகர்கோவில், ஜன.5 : நாகர்கோவில் அருகே கோயிலுக்கு வந்த கல்லூரி மாணவி மாயமான விவகாரத்தில் அவரை அழைத்து வந்த பக்கத்து வீட்ைட சேர்ந்த தம்பதியும் மாயமாகி இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் சுசீந்திரத்தை சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம்பெண், தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்,  தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதியருடன், நாகர்கோவில் நாகராஜாகோயிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் மாயமானார். நீண்ட நேரமாக மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். தோழிகள் வீடுகளிலும் விசாரித்தனர். ஆனால் மாணவி குறித்து எந்த தகவலும் இல்லை. இது குறித்து அவரது தந்தை சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் தான் அவரை கோயிலுக்கு அழைத்து சென்ற தம்பதியையும் காணவில்லை என்பது தெரிய வந்தது. இவர்கள் தங்களை கணவன், மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டு  தங்களது சொந்த ஊர் மதுரை என்றும், வியாபாரத்துக்காக குமரி மாவட்டத்துக்கு வந்திருப்பதாகவும் கூறி மாணவிக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறி இருக்கிறார்கள். மாணவி குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாகவும் பழகினர்.

இந்த நிலையில் தான் சம்பவத்தன்று,  மாணவியை நாகராஜா கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறி சென்று இருக்கிறார்கள். அதன் பின்னர் இவர்களை காணவில்லை. இவர்களை பற்றி எந்த தகவலும் வீட்டின் உரிமையாளரான, மாணவியின் தந்தைக்கு தெரியவில்லை. கணவன், மனைவியாக இருந்தவர்கள் தான் மாணவியை கடத்தி சென்று இருக்கலாமா? அல்லது வேறு பிரச்னைகள் இருக்குமா? என்பது குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று மாணவி நாகராஜா கோயிலுக்கு வந்தாரா? என்பது பற்றி  விசாரிக்கவும், மாணவியுடன் வந்த தம்பதியை அடையாளம் காணவும் நாகராஜா கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை  ஆய்வு செய்தனர். மாணவி மற்றும் அவருடன் வந்த தம்பதி மாயமான சம்பவம் தொடர்பாக தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: