பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சலுகைகளுக்கு வரும் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் அதிகாரிகள் தகவல்

வேலூர், ஜன. 5: பொதுத்தேர்வின்போது சலுகை தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் வரும் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்நிலையில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் தேர்வுத்துறை 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணையை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, பொதுத்தேர்விற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்களின் பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அதற்கான விவரங்கள் எமிஸ் இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகைகள் தேவைப்பட்டால், வரும் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 10, பிளஸ்1, பிளஸ்2 வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தங்களுக்கு தேர்வு எழுத உதவியாளர் உள்ளிட்ட ஏதேனும் சலுகைகள் தேவையென்றால் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். நோயின் தன்மை, எந்த மாதிரியான சலுகைகள் தேவைப்படும் என்று உரிய மருத்துவச் சான்றுடன் மாற்றுத்திறன் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று அதை வரும் 13ம் தேதிக்குள் முதன்மைக்கல்வி அலுவலர்களிடம், தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: