×

இன்று முதல் அமலுக்கு வருகிறது பழநியில் மாஸ்க் அணியாவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் டிஎஸ்பி எச்சரிக்கை

பழநி: பழநியில் இன்று முதல் மாஸ்க் அணியாவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படுமென டிஎஸ்பி சத்தியராஜ் எச்சரித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் ஒமைக்ரான் என உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வருகிறது. கொரோனா 2வது அலையைவிட தற்போது உருவாகி இருக்கும் ஒமைக்ரான் வைரசின் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசி செலுத்தியவர்களையும் பாதிக்கும் அபாயம் கொண்டதாக உள்ளது. எனவே, பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடக்கூடாது. பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தி கைகழுவ வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் பழநி போன்ற வழிபாட்டு தலங்களில் உள்ள முக்கிய ஊர்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து பழநி டிஎஸ்பி சத்யராஜ் நிருபர்களிடம் கூறியதாவது, ‘பழநி பகுதியில் இன்று முதல் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது. வழக்குப்பதிவு செய்வதும், அபராதம் வசூலிப்பதும் தண்டிப்பதற்காக அல்ல. உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன்மூலம் மற்றவர்களுக்கு பொறுப்புணர்வை உண்டாக்கவும்தான். இன்று முதல் தீவிர கண்காணிப்பு, நடவடிக்கை இருக்கும்’ என்றார்.

Tags : DSP ,Palani ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...