திருச்செங்கோடு நகராட்சியில் வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளை பூட்டி அதிகாரிகள் நேற்று சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.  திருச்செங்கோடு நகராட்சிக்கு சொத்துவரி ₹9.87 கோடி, குடிநீர் கட்டணம் ₹2.5 கோடி, காலிமனை வரி ₹1.37 கோடி ஆகியவை நிலுவையில் உள்ளது. புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான 332 கடைகள் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளது. இதில் பல கடைகளை குத்தகை எடுத்தவர்கள், நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். இதனால் நகராட்சி கடைகள் மூலம் வரவேண்டிய இரண்டு ஆண்டு வாடகை பாக்கி மட்டும், சுமார் ₹3 கோடி உள்ளது. பல முறை இந்த கடைகளை குத்தகை எடுத்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும், நேரில் அறிவுரை வழங்கியும், அவர்கள் வாடகையை செலுத்தவில்லை.

இதனால் நகராட்சி கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள் ஆகியோருக்கு சரிவர சம்பளம் வழங்க முடியவில்லை. மேலும் காவிரி குடிநீருக்கான மின் கட்டணம், பல கோடி செலுத்த வேண்டி உள்ளது. நகராட்சியில் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பணிகள் கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் கணேசன், ஒருவார காலத்திற்குள் நகராட்சிக்கு நிலுவை வாடகை மற்றும் வரியினங்களை செலுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடைகளை பூட்டி சீல் வைப்பதுடன், வரி கட்டாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நேற்று நகராட்சி வருவாய் ஆய்வாளர் கோபி தலைமையில் அலுவலர்கள், வாடகை செலுத்தாத கடைகளுக்கு சென்று வசூல் பணியில் ஈடுபட்டனர். அப்போது வாடகை செலுத்த மறுத்த 6 கடைகளை பூட்டிய அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் வாடகை நிலுவை, வரி நிலுவை மற்றும் குடிநீர் கட்டண நிலுவை வைத்துள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: