ஆற்றில் மூழ்கிய வாலிபரை 3வது நாளாக தேடும் பணி

தேன்கனிக்கோட்டை: ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த பொன்ராஜ் மகன் அதிசயநாதன் (28), ஓசூரில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். அதே தொழிற்சாலையில் வேலூரை சேர்ந்த வீரப்பன் மகன் அஜித் (24) என்பவரும் பணியாற்றி வருகிறார். நண்பர்களான இவர்கள் கடந்த 2ம் தேதி, அஞ்செட்டி அருகே மஞ்சுகொண்டப்பள்ளி ஊராட்சி தப்பகுளி என்னுமிடத்திற்கு சென்று, காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற அதிசயநாதன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார்.

இதையடுத்து அஞ்செட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கிய அதிசயநாதனை தேடும் பணியில் 3வது நாளாக நேற்றும் ஈடுபட்டனர். தப்பக்குளி முதல் பிலிகுண்டுலு வரை பரிசல் ஓட்டிகள் மூலம் தீயணைப்பு துறையினர் தேடினர். அப்பகுதி முதலைகள் உள்ள பகுதி என்பதால், தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரவு நேரமானதால் தேடும் பணி கைவிடப்பட்டது. தொடர்ந்து இன்றும் தீயணைப்பு துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

Related Stories: