மாவட்ட சுகாதார பேரவை மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ உபகரணங்களுக்கு நிதி பெறப்படும்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மைய அரங்கில் சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுச்சாமி வரவேற்றார். எம்எல்ஏக்கள் கணேஷ், பொன்.ஜெயசீலன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பங்கேற்று துவக்கி வைத்தார். இதில், சுகாதார பணிகள் இணை இயக்குநர் பவானி உமாதேவி பேசியதாவது: தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் சுகாதார பேரவை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பேரவை கலெக்டர் மற்றும் ஊர் பிரதிநிதிகளை முன்னிலையாக கொண்டு நடத்தப்படும். ஏற்பாட்டு குழு மற்றும் பணிபுரியும் குழு என இரு குழுக்கள் அமைக்கப்பட்டன.

மக்களின் தேவைக்கேற்ப பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையை மேம்படுத்தவே இந்த பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. இப்பணியை மேற்கொள்ள சுகாதார பணிகள் துணை இயக்குநர் தலைமையில் வட்டார சுகாதார பேரவைகள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் வட்டாரங்களில் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான பேரவை நேற்று நடத்தப்பட்டது. இப்பேரவையின் மூலம் மக்களின் தேவை உணர்ந்து அதற்கேற்றவாறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு தேவையான கட்டிடங்கள், மருத்துவ உபகரணங்கள், அதிகப்படியான படுக்கை வசதிகள், அவசர ஊர்திகள், மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான வசதிகள் உடையாக மருத்துவமனையாக மாற்றுதல், பொது கழிப்பிடங்கள், அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த வங்கிகள், தரம் உயர்த்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகள், தாய் பாலுட்டும் தனி அறைகள் போன்ற கூடுதல் தேவைகள் மாவட்ட சுகாதார பேரவையின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு, இவை அனைத்திற்கும் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் வாயிலாக நிதி பெறப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கலெக்டர் அம்ரித் பேசுகையில்,``நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பொதுமக்களுக்கு மருத்துவ வசதிகள் அளிப்பதற்கான சாலை உள்ள அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். முன்னதாக, காசநோய் சிகிச்சை, குடும்ப நல சிகிச்சை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு, இன்னுயிர் காப்போம் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், டெங்கு பரவாமல் தடுக்கும் முறைகள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், 15 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Related Stories: