×

விருதுநகர் மாவட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம் கலெக்டர் தகவல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டத்தில், பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட இன்று முதல் அனைத்து அரிசி கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் என 5,93,700 ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக பச்சரிசி-1 கிலோ, வெல்லம்-1 கிலோ, முந்திரி-50 கிராம், திராட்சை-50 கிராம், ஏலக்காய்-10 கிராம், பாசிப்பருப்பு-500 கிராம், நெய்-100 கிராம், மஞ்சள்தூள்-100 கிராம், மிளகாய்தூள்-100 கிராம், மல்லித்தூள்-100 கிராம், கடுகு-100 கிராம், சீரகம்-100 கிராம், மிளகு-50 கிராம், புளி-200 கிராம், கடலைப்பருப்பு-250 கிராம், உளுந்தம்பருப்பு-500 கிராம், ரவை-1 கிலோ, கோதுமை மாவு-1 கிலோ, உப்பு-500 கிராம் ஆகியவை அடங்கிய துணிப்பை மற்றும் முழு கரும்பு ஒன்று வழங்கப்படும்.

ரேசன் கடைகளில், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் ஒருவர் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் விடுதலின்றி வழங்கப்படும். அனைவரும் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் நியாயவிலைக்கடைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

தெரு வாரியாக கார்டுதாரர்கள் எண்ணிக்கை அடிப்படையில் தினமும் சுழற்சி முறையில் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். 750 கார்டுதாரர்களுக்கு மேல் உள்ள நியாயவிலைக்கடைகளில் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படும். மேலும் 7.01.2022 அன்று வெள்ளிக்கிழமை நியாயவிலைக்கடை வழக்கம்போல் செயல்படும். அதற்கு பதில் ஜனவரி 15.01.2022 சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

வரிசையில் நிற்பவர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என கள அலுவலர்கள், விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியை கண்காணிக்க ஒவ்வொரு வட்டத்திற்கும் துணை ஆட்சியர் நிலையில் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Pongal ,Virudhunagar District ,Stores ,
× RELATED தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்