தும்மக்குண்டு ஊராட்சியில் சிதிலமடைந்த ரேஷன் கடை மேற்கூரை சீரமைக்க கோரிக்கை

வருசநாடு: தும்மக்குண்டு ஊராட்சியில் சிதிலமடைந்த ரேஷன் கடை மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியம், தும்மக்குண்டு ஊராட்சி மன்ற வளாகத்தில், வருசநாடு (எம்பி 92) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் இயங்கும் ரேஷன் கடை உள்ளது. இந்த கடை மூலம் 750க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். உரிய பராமரிப்பில்லாததால், இந்த ரேஷன் கடை கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மேலும், கடையின் மேற்கூரை முற்றிலும் பழுதடைந்துள்ளது. இதனால், மழை பெய்யும்போது, மேற்கூரை வழியாக ரேஷன் கடைக்குள் மழைநீர் இறங்கி விடுகிறது. இதன் காரணமாக இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட உணவு பொருட்கள் மழைநீரில் நனைந்து வீணாகி வருகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனையடுத்து தற்காலிகமாக பழுதடைந்த மேற்கூரை மீது தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. இருப்பினும் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவது தொடர்கிறது.

சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த ரேஷன் கடையை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என மாவட்ட குடிமைப்பொருள் நிர்வாகத்துக்கு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: