தேனி அருகே வடபுதுப்பட்டியில் இல்லம் தேடி கல்வி மையம் தொடக்கம்

தேனி : தேனி அருகே வடபுதுப்பட்டியில் இல்லம் தேடி கல்வி மையத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். கொரோனா நோய்த் தொற்றால் பொது முடக்க காலங்களில், அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களின் கற்றல் இடைவெளி மற்றம் இழப்புகளை சரிசெய்யும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி, தேனி மாவட்டத்தில் 1120 குடியிருப்பு பகுதிகளில், இத்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்க 8 ஆயிரத்து 421 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 429 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக 674 தன்னார்வர்கள் தொடக்க நிலை மையங்களுக்கும், 818 தன்னார்வலர்கள் உயர்தொடக்க நிலை மையங்களுக்கும் என மொத்தம் 1 ஆயிரத்து 492 தன்னார்வலர்கள் இல்லம் தேடி கல்வி பயிற்றுவிக்க உள்ளனர். இதற்காக ஆயிரம் சமுதாயக் கூடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தினந்தோறும் பள்ளி நேரம் தவிர்த்து மாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் கற்பித்தல் நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து, இம்மையங்களுக்கு கல்வித்துறை மூலமாக கரும்பலகை, நோட்டுப்புத்தகங்கள், எழுதுபொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

நேற்று தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள ஊராட்சி சமுதாயக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள இல்லம் தேடிக்கல்வி மையத்தினை தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் தலைமை வகித்து திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ சரவணக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின்போது மையத்தில் பயில உள்ள மாணவ, மாணவியர்களுக்கு கலெக்டர் முரளீதரன் மற்றும் எம்.எல்.ஏ சரவணக்குமார் மாலை அணிவித்தும், இனிப்புகளை வழங்கியும் வரவேற்றனர். இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ரேணுப்பிரியாபாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டானர்.

Related Stories: