×

மாவட்டத்தில் மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் தேனியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

தேனி: 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் நேற்று துவக்கி வைத்தார். தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இதுவரை மாவட்டத்தில் 13 லட்சத்து 21 ஆயிரத்து 52 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசி 7 லட்சத்து 66 ஆயிரத்து 365 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 5 லட்சத்து 54 ஆயிரத்து 727 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையை தொடர்ந்து, புதிதாக உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இதனையடுத்து, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தி வந்த கொரோனா தடுப்பூசியை 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த அரசு முடிவு செய்தது. இதன்படி, நேற்று (ஜன.3) முதல் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.

நேற்று தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட அல்லிநகரத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் 483 மாணவ, மாணவியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் தலைமைவகித்து தடுப்பூசி பணியினை தொடங்கி வைத்தார். பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி பிரவீன்உமேஷ்டோங்கரே, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.ஜெகவீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து, ஆண்டிபட்டி வட்டாரத்தில் 30 பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரத்து 263 பேர்,

போடி வட்டாரத்தில் 27 பள்ளிகளில் பயிலும் 7 ஆயிரத்து 376 பேர், சின்னமனூர் வட்டாரத்தில் 26 பள்ளிகளில் பயிலும் 3 ஆயிரத்து 786 பேர், கம்பம் வட்டாரத்தில் 35 பள்ளிகளில் பயிலும் 6 ஆயிரத்து 491 பேர், மயிலாடும்பாறை வட்டாரத்தில் 16 பள்ளிகளில் பயிலும் 2 ஆயிரத்து 420 பேர், பெரியகுளம் வட்டாரத்தில் 36 பள்ளிகளில் பயிலும் 7 ஆயிரத்து 421 பேர், தேனி வட்டாரத்தில் 33 பள்ளிகளில் பயிலும் 11 ஆயிரத்து 768 பேர், உத்தமபாளையம் வட்டாரத்தில் 20 பள்ளிகளில் பயிலும் 6 ஆயிரத்து 613 பேர் என மொத்தம் மாவட்ட அளவில் 223 பள்ளிகளில் பயிலும் 51 ஆயிரத்து 138 மாணவ, மாணவியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

Tags : Theni ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு