உயர்நிலை,மேல்நிலை பள்ளியை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

சிவகங்கை:  அரசு உயர்நிலை,மேல்நிலை பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காணொலி வாயிலாக நடந்த தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் குறித்து மாநில பொதுச் செயலாளர் சங்கர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் காணொலி வாயிலாக நடந்தது. மாநிலத் தலைவர் தியாகராஜன், அமைப்புச் செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் மாநில துணை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழக அரசு ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்விற்கு நன்றியை தெரிவிக்கிறோம். பள்ளிக்கல்வித் துறையில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக தரம் உயர்த்தி அதில் பணியாற்றக் கூடிய அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த அரசால் கொரோனா பெயரால் பறிக்கப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு போன்றவற்றை தமிழக அரசு பரிசீலனை செய்து விரைவில் அறிவிக்க வேண்டும்.

சமீபத்தில் பள்ளிக்கல்வி ஆணையரால் வெளியிடப்பட்ட கலந்தாய்வு அட்டவணையில் அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வுக்கான தேதி குறிப்பிடப்பட வில்லை. கடந்த 5 ஆண்டு காலமாக பதவி உயர்வு வழங்காத நிலையில் இந்த ஆண்டும் பதவி உயர்வு மறுக்கப்பட்டிருப்பது இப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே கலந்தாய்வு அட்டவணையை மறு பரிசீலனை செய்து அறிவித்து கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: