கண்மாய் கரைகளில் மது அருந்த கூடாது எஸ்பி எச்சரிக்ைக

மதுரை: மதுரை மாவட்டத்தில் கண்மாய் கரைகளில் மது அருந்துபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: மதுரை புறநகர் பகுதிகளில் கன்மாய் கரைகள் உள்ளிட்ட இடங்களில் கும்பலாக அமர்ந்து மது அருந்துவதால் தேவையற்ற, விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த மாதம் ஒத்தக்கடை அருகே ஒரு கண்மாய் கரையில் ஒரு கும்பலால் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஜன.2 இரவு சக்கிமங்கலத்தில் பிரேம்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரு சம்பவமும் குடிபோதையில் ஏற்பட்ட மோதலால்தான் நடந்துள்ளது.

எனவே, மதுரை மாவட்டத்தில் பொது இடங்கள், கண்மாய் கரைகளில் அமர்ந்து மதுபானம் அருந்தக்கூடாது. பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் இடையூறு செய்யக்கூடாது. பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் அல்லது ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டக்கூடாது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்கள் கெட்ட பழக்கத்திற்கும், போதைக்கும் அடிமையாகாமல் தங்களை நல்வழிப்படுத்தி கொள்ள வேண்டும். இவர்களின் செயல்பாடுகள், நண்பர்கள் வட்டம், அவர்கள் செல்லும் இடங்கள் போன்றவற்றில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். கண்காணிக்க வேண்டும். கெட்ட செயல்கள் மற்றும் கெட்ட நண்பர்களுடனான தொடர்பை துண்டிக்க செய்து, அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: