இல்லம் தேடி கல்வி திட்டம் சேலத்தில் 2,845 மையங்களில் முதல் கட்டமாக தொடக்கம்

சேலம்: சேலத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் 2,845 மையங்களில் முதற் கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார். சேலம் கன்னங்குறிச்சயில் உள்ள அங்கன்வாடி மையத்தில், இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்க விழா கலெக்டர் கார்மேகம் தலைமையில் நேற்று நடந்தது. மாணவ, மாணவிகள் குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர். பின்னர், கலெக்டர் கார்மேகம் இல்லம் தேடி கல்வி திட்ட உறுதி மொழி வாசிக்க, மாணவ, மாணவிகள் பின் தொடர்ந்து கூறினர். தமிழக அரசு சார்பில், 3 சிறந்த பள்ளிக்கான விருதுகளை கலெக்டர் கார்மேகம், தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் ராஜேந்திரன் எம்எல்ஏ, பார்த்திபன் எம்பி, சிஇஓ முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் 1,497 தொடக்க நிலை மையங்கள், 1,348 உயர் தொடக்க நிலை மையங்கள் என 2,845 மையங்களில் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் தன்னார்வலர்களாக 2,845 பேர் பணிபுரிகின்றனர். இதில் 25,447 தொடக்க நிலை மாணவர்கள், 21,763 உயர் தொடக்க நிலை மாணவர்கள் என மொத்தம் 47,210 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர். இத்திட்டம் 6 மாத காலத்திற்கு தினசரி குறைந்தபட்சம் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம், மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். மாணவர்களின் குடியிருப்புகளிலேயே எளிய முறையில் கற்றல் வாய்ப்புகளை வழங்கி, கலை மற்றும் பண்பாடு மற்றும் அன்றாட கற்றல் செயல்பாடுகளில் படிப்படியாக பங்கேற்க செய்வதே நோக்கமாகும். இதற்காக ஆசிரியர்களும், தன்னார்வலர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம், குழந்தைகள் பள்ளிக்கு வந்து கல்வி பெறுவது போலவே, வீட்டின் அருகிலேயே அதனை பெறுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்கள், பள்ளி வளாகங்கள், சமுதாய கூடங்கள் அல்லது அரசின் கட்டடத்திலும் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: