பர்கூர் அருகே குட்டையில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஜெகதேவி வேடர்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர், ஏற்கனவே இறந்துவிட்டார். இவரது மனைவி ரத்திம்மாள். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்களில் ஜெயசந்திரன்(10), ஜெயசூர்யா(8) ஆகிய இருவரும் அங்குள்ள பள்ளியில் முறையே 5 மற்றும் 3ம் வகுப்பு படித்து வந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்த இருவரும் ஆடுகளை ஓட்டிக்கொண்டு அப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் மேய்த்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, அங்குள்ள 10 அடி ஆழமுள்ள குட்டையில் ஜெயசூர்யா தவறி விழுந்துள்ளான். அதனைக்கண்டு அதிர்ச்சிக்குள்ளான ஜெயசந்திரன், ஊருக்குள் ஊடிச்சென்று விபரத்தை தெரிவித்துள்ளான். உடனே, கிராம மக்கள் விரைந்து சென்று ஜெயசூர்யாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது, அவன் உயிரிழந்திருப்பதை கண்டு கதறி துடித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: